அம்பாளின் ஸ்வரூபம் : 2
அம்பாளின் ஸ்வரூபம் : 2
பெரியவா வாக்கு
இப்படித்தான் பிரபஞ்சத்தில்
ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள்
காரியங்கள் ஆகியவற்றில்
பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும்
இவை எல்லாம் ‘#சொல்#என்றால்,
‘#பொருளாக# அந்த மூலப்பொருள் இருக்கிறது.
அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான்.
உருவங்கள் மட்டுமில்லை.
எண்ணங்கள், காரியங்கள்
எல்லாமும் அவள்தான்.
அவளின்றி நம் சரீரம், மனசு, உயிர் எதுவுமில்லை.
‘சரீரம் த்வம் சம்போ:–
நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்’
என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசார்யாள்
அடுத்த ஸ்லோகத்தில்
நீ தான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார்.
அந்த மூலமான மனஸிலிருந்து,
சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது.
அது மேலும் மேலும் ஸ்தூலமாகி,
காற்று,
அக்னி,
ஜலம்,
மண்
எல்லாம் வந்தன.
இதெல்லாமும் நீதான் என்கிறார்.
நீ இல்லாமல் வேறு
வஸ்து எதுவுமே இல்லை என்கிறார்;
த்வயி பரிணதாயாம் நஹி பரம்.
‘சம்பு’ என்ற உயிருக்கு
நீயே சரீரம் என்று சொன்னாலும்,
உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான்.
நீயேதான் #விசுவம்#என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் –
#த்வம்ஏவஸ்வாத்மானம்பரிணமயிதும்விச்வவபுஷா#.
இங்கே நம் சங்கராசாரியார் சொல்வது,
'உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்;
உள்ளேயிருக்கிற உயிர்,
அந்தர்யாமி அவரே’ என்கிற
ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது.
ஆனால் அப்போது கூட
உடம்பு, உயிர் என்ற வித்தியாசம் –
துவைதம் – இருக்கிறது.
கொஞ்சம் த்வைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார்.
‘எங்களிடம் இருக்கிற
துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான
பரம ஞானமும், பரமானந்தமும் நீதான்.
இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள்,
இரண்டு மாதிரி ஆகி சிவயுவதி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய்’ என்கிறார்.
இது பாவம்தான்.
வாஸ்தவத்தில் விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான்.
அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ அந்த சம்புவும் அவளும்கூட ஒன்றுதான்.
அத்வைதம் தான்.
ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால்,
அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்?
காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது.
அதற்கு ரூபம் இருக்கிறதோ?
அம்பாளோ அதை விட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை (vaccum) கூட உண்டாக்குகிறார்கள்.
ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை.
மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள்.
அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்?
ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை.
அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால்
அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி.
அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா?
அவள் இருந்தால் மட்டும் போதாது, அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.
அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று
நம்மால் உணர முடியவில்லை.
அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை.
இப்படிப்பட்ட நமக்காகவே, நாம் அன்பு செய்வதற்காகவே,
அவள் இப்போது
காருண்யமும்
லாவண்யமும்
ஒரு ரூபமாகித் திவ்விய
மங்கள விக்கிரகமாக வருகிறாள்.
ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா?
இப்படித்தான் ‘க்ருத காடின்யவத்’ என்கிற நியாயப்படி,
பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய்,
ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.
அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?
இதன் அடுத்தப் பகுதியை நாளைய பதிவாக காணலாம்.

Comments
Post a Comment