அம்பாளின் ஸ்வரூபம் : 3
அம்பாளின் ஸ்வரூபம் : 3
பெரியவா வாக்கு
அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?
சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால்,
அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது?
அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது,
அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள்.
அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது?
சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.
ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் .
ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன.
மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து,
ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத
நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும்,
கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்னபூரணேஸ்வரியானவள் அம்பாள் தான்.
அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள்.
அவளைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.
இத்தனை ஸெளந்தர்யம்,
லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது.
காருண்யம்தான் லாவண்யம்.
பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல.
கொஞ்சம் கோபம் வந்தால்,
துளி ஜுரம் வந்தால்,
சரீர அழகு போய்விடுகிறது.
அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள்.
எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ,
அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
அவளே
ராஜராஜேசுவரி,
புவனேசுவரி,
துர்க்கை,
காளி
என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால்,
அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது.
மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம்.
பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள்.
அவளுடைய அநுக்கிரகத்தால் மகாகவியாகப் பரிணமித்த காளிதாஸர்
அவளை ஸர்வ வாணாத்மிகே,
ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார்.
‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.
’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம்.
ஒலி வடிவான அக்ஷரங்களும்,
ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான்.
அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை.
ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள்.
ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள்.
அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன.
நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.
ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன.
இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள்.
ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம்
ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக் கிறார்கள்.
இவற்றுக்குப் பெயர்
“#மாத்ருகா#” என்பது.
‘#மாத்ரு#’ என்றால் ‘#தாயார்#’ என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள்.
இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன.
இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம்.
மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்;
அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால்,
அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள்.
இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம்.
அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்சம் முழுக்க வந்தது.
நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஓங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள்.
அ,உ,ம மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஆகிறது.
அ – சிருஷ்டி;
உ – பரிபாலனம்;
ம – சம்ஹாரம் என்பார்கள்.
அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம்.
இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால்,
உ – ம – அ – என்றாகும்.
அதுதான் #உமா#என்பது. உபநிஷதமும்
அவளை ‘உமா ஹைமவதி’ என்றே சொல்கிறது.

Comments
Post a Comment