அம்பாள் : எப்படிபட்டவள் - 4. நிறைவு பகுதி

 


அம்பாள் : எப்படிபட்டவள் - 4



அழகு – அன்புகளின் முழுமை : 

தெய்வத்தின் குரல்

(ஆறாம் பகுதி).


அதுதான் அப்பா, அம்பாள் ரூபம்!


காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல.


கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப் பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை. 


துளி ஜ்வரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது. 


கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு.


ஆனதால் நம் கல்பனையில் அன்பை எத்தனை உத்க்ருஷ்டமாக [உயர்வாக] உருவமாக்கிப் பார்க்கமுடிகிறதோ அப்படிப் பாரப்பா! 


அதுதான் அம்பாள் ரூபம் என்று வைத்துக்கொள்.


”சாந்தமாக இருக்கிற பிரம்மத்தின் அத்தனை சக்தியும்தான் அம்பாள் என்று சொல்லிவிட்டு, 


அதை அன்பு என்று மட்டும் ஏன் விசேஷித்துச் சொல்ல வேண்டும்!


லோகத்தில் 

கஷ்டம், 

த்வேஷம், 

பயம் எல்லாம் இருக்கிறதென்றால் இதெல்லாமும் பரமாத்ம சக்தியிலிருந்து வருவதுதானே?


பின்னே அதை – அவளை – அன்பாக மட்டும் எப்படிச் சொல்வது?”


அது ஸரி,


ஆனால் லோகத்தில்


தாயன்பு, 

ஸஹோதர பாசம், 

ஸ்நேஹிதர்களின் மைத்ரி (நட்பு), புருஷன் பெண்டாட்டியின் பிரேமை, அடியார்களின் பக்தி, 

மஹான்களின் கருணை 

என்று பல ரூபங்களில் அன்பும் இருக்கோ இல்லியோ? 


இது எல்லாமும் பராசக்தியிடமிருந்து, அவளுடைய அன்பிலிருந்து வந்ததுதானே? 


அதனால் இப்படித் தியானம் பண்ணு.


எல்லாமாக – கோபமாக, பயமாகக்கூட – அவள் இருந்தாலும் உனக்கு அப்படியெல்லாம் பாவனை பண்ணினால் மனஸுக்கு சாந்தி ஸெளக்யங்கள் ஏற்படவில்லையே!


இப்படி அன்புருவாக பாவித்தால் தானே உன் மனஸுக்கு ஹிதமாக, பிரியமாக, ஸந்தோஷமாக இருக்கிறது? 


அதனால் உன் லிமிடேஷனால், உனக்கு ஏற்க, லிமிட் இல்லாத பராசக்தியை அன்பு என்று லிமிட் பண்ணு. 


ஆனால் அந்த அன்பு லிமிட் இல்லாதது, 


எல்லையில்லாதது என்று தியானம் பண்ணு.


கோமுகியிலிருந்து கங்கா ஸாகரம் வரை அவ்வளவு தூரமும் கங்கை கங்கைதான். 


ஆனால் அது ஹிமோத்கிரியில் மேட்டில் பள்ளத்தில்


 ”ஹா ஹு” என்று விழுகிற இடங்களில் உன்னால் ஸ்நானம் பண்ணமுடியுமா? 


ஸமநிலமாக அது பாய்கிற இடங்களில்கூட ரொம்ப ஆழமில்லாத இடத்தில், சுழல் இல்லாத இடத்தில் முதலை இல்லாத இடமாகப் பார்த்துத்தானே ஸ்நானம் பண்ணுகிறாய்? 


எல்லாம் கங்கையானாலும் உன்னால் அதை எங்கே ஸெளக்யமாய் அநுபவிக்க முடிகிறதோ அங்கேதானே இறங்குகிறாய்? 


அந்த மாதிரி பராசக்தி நல்லது கெட்டது எல்லா குணங்களும் என்றாலும், 


உனக்கு ஸெளக்யமாக ஆராதிக்க வேண்டுமானால் அவளை ரொம்ப நல்லவள், அன்பானவள் என்றே தியானம் பண்ணு.


பெரியோர்களெல்லாம் இதனால் தான் அவளை முக்யமாகப் பரமாத்மாவின் க்ருபாசக்தி என்றே வைத்திருக்கிறார்கள்.


பரமாத்மா-பராசக்தி என்கிற ஸர்வலோக ராஜா-ராணிகளை 

தாய் தந்தையாக 

சிவன்-அம்பாள் என்றும், 


விஷ்ணு-லக்ஷ்மி என்றும் வழிபடும்போது ஸித்தாந்த சைவத்தில் அம்பாளை முக்கியமாக சிவத்தின் அருளாற்றல்,


 ”அருளது சக்தியாகும் அரன் தனக்கு” என்றே சொல்லியிருக்கிறது.


வைஷ்ணவ சாஸ்திரங்களிலும் மஹா விஷ்ணுவைக் கருணை பண்ணும்படியாகத் தூண்டிவிடும் ‘புருஷகாரம்’ லக்ஷ்மியே என்று சொல்லியிருக்கிறது.


 ‘ஸ்ரீவைஷ்ணவம்’ என்பதாக ஸ்ரீயான லக்ஷ்மியின் கருணையை முதலில் வைத்தே மதத்துக்குப் பேர் கொடுத்திருக்கிறார்கள்.


பராசக்தியின் அநேக குணங்களில் ஒன்று தான் அன்பு என்பதுகூட ஸரியில்லை. 


அதுதான் பிரதானமான குணம். 


இந்த அன்பைக் கறுப்பு வெல்வெட்டில் வைத்த வைரம் மாதிரிப் பளிச்சென்று எடுத்துக்காட்டுவதற்கேதான் மற்ற குணங்களைக் கொண்டிருக்கிறாள்.


ஆகையால்தான் கோர ரூபங்களில் வந்தாலும் அன்பு வெள்ளமாக,


அழகு வெள்ளமாக இருக்கிறாள். இல்லாவிட்டால் 


பெங்காலிலும், மலையாளத்திலும் இப்படி ஸகல ஜனங்களும் காளி போன்ற ரூபங்களை 


”மா! மா!”, ”பகவதி!” என்று பக்திபண்ணிக் கொண்டிருப் பார்களா? அப்படிபட்டவள்


ஸெளந்தர்ய ரூபத்திலேயே வந்துவிட்டால் கேட்பானேன்?


நம்முடைய 


காம க்ரோதாதி அழுக்குகள், அழுகை, பயம் – 


எல்லா பயங்களிலும் பெரிய ஸம்ஸார பயம் – ஆகியவற்றை அடித்துக் கொண்டு போய்விடும் ஸெளந்தர்ய வெள்ளமாக அம்பிகை இருக்கிறாள். 


[அந்த] அழகே நமக்கு ஸகல ஸெளபாக்யங்களையும் அளித்துவிடுகிறது. 


'பகம்’ என்பதிலிருந்து ‘பாக்யம்’ வந்திருக்கிறது. ‘


பகம்’ என்றால் சிறப்பானது, excellence என்று அர்த்தம். 


எல்லா பகங்களும் எவரிடம் நிறைந்திருக்கிறதோ 


அவரே ‘பகவான்’; 


பெண் பாலானால், ‘பகவதி’.


 ‘பாக்ய’த்தை மேலும் மங்களமாகத் தெரிவிப்பதற்காக 


'ஸெளபாக்யம்’ என்பது. ‘ஸு’ என்றால் நல்லது.


 ‘ஸு’விலிருந்து வருவது ‘ஸெள’.


 ஸுகம்-ஸெளக்யம் என்கிறோமல்லவா? 


ஸெளபாக்யங்கள் யாவும் ஸெளந்தர்ய ரூபத்தில் ஒன்று கூடியிருக்கிற மூர்த்தியே த்ரிபுரஸுந்தரியான அம்பாள்.


ஆகையினால் அவளுடைய ஸ்வரூபத்தை ஸ்மரிப்பதாலேயே ஸகல ஸெளபாக்யங்களும் – க்ஷேமங்களும் – 


நமக்குக் கிடைத்துவிடும்


 ”தநோது க்ஷேமம் ந:தவ வதந ஸெளந்தர்ய லஹரீ” என்றே ஆசார்யாள் சொல்கிறார்.


 [ச்லோ. 44] ”


உன் முகத்திலிருந்து பொங்கி வழியும் அழகு வெள்ளம் எங்களுக்கு க்ஷேமங்களை உண்டாக்கட்டும்,


 அம்மா!” என்கிறார்.


 க்ஷேமங்களை உண்டாக்குவது என்பதால் அவளுடைய ஸெளந்தர்யமே 


ஸெளபாக்ய ப்ரதம் [நற்பேறுகளை நல்க வல்லது] என்று தெரிகிறது.


”க்ஷேமங்களை எங்களுக்கு உண்டாக்கட்டும்”என்கிறார். 


”ந:” என்றால் ‘எங்களுக்கு’. ஆசார்யாள் தனக்கு மட்டும் க்ஷேமத்தைக் கேட்கவில்லை. 


நம் எல்லோருக்கும் கேட்கிறார். எல்லோருக்கும், தரிசனம் பண்ணமுடியாதவர்களுக்கும், ‘எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பது போல க்ஷேமம் உண்டாகட்டும் என்று ஸர்வ பூத தயையினால் பிரார்த்திக்கிறார்.


காயத்ரீ மந்திரத்திலேயே இப்படித்தான் எல்லாருக்கும் புத்தி நல்லதில் தூண்டிவிடப்படவேண்டும் என்று பிரார்த்தனை வருகிறது.


குயுக்திக்காரன் ஒருத்தன் இருந்தானாம். 


”எல்லோருமாகச் சேர்த்துத்தானே பிரார்த்தனை இருக்கிறது? 


அதனால் எவனாவது ஒருத்தன் காயத்ரீ பண்ணிவிட்டால் போதுமே! நான் ஏன் பண்ணணும்?” என்றானாம்.


அது ஸரியில்லை [சிரித்து] அந்த எவனோ ஒருத்தன் இன்னொரு த்தனாக இருக்கட்டுமே என்று அத்தனை பேருமே நினைத்துவிட்டால்?


”எல்லோருக்கும்” என்று ஏன் சொல்லியிருக்கிறதென்றால் காயத்ரீ ஜபிக்க அதிகாரமில்லாத பல பேர் இருக்கிறார்கள். 


ஸ்திரீகள், குழந்தைகள், ரொம்பவும் நோய் வாய்ப்பட்டிருப்பவர்கள், 

பிணத் தீட்டிலிருப்பவர்கள் காயத்ரீ பண்ணுவதற்கில்லை. இப்படிப் பட்டவர்களை உத்தேசித்துத்தான் ”எங்களுடைய புத்தியை” என்று இருப்பது. அதிகாரமிருந்தும், 


வேறே எந்தவிதமான தவிர்க்க முடியாத தடையும் இல்லாதபோது,


 ”ந:” என்றிருப்பதைக் காட்டி யுக்தி பண்ணி ஜபிக்காமலிருந்தால், ஸ்வாமியும் அதற்குமேலே யுக்தி பண்ணி ”நஹி” [அநுக்ரஹமில்லை] என்று இருந்துவிடுவார்!…..


”எங்களுக்கு, அதாவது ஸமஸ்த ஜனங்களுக்கும், 


உன் வதன ஸெளந்தர்யம் க்ஷேமத்தை உண்டுபண்ணட்டும்” என்று அம்பாளிடம் ஆசார்யாள் வேண்டிக் கொண்டதைச் சொன்னேன். 


கண்ணுக்கு நன்றாக இருப்பதே க்ஷேமகரமாகவும் இருக்கிற தென்றால் அழுகும் அருளும் ஒன்றாயிருக்கிறதென்று தெரிகிறது.


 3 க்ஷேமம் உண்டாக்கணும் என்ற அம்பாளின் கருணை ஹ்ருதயமே அவளுடைய ஸெளந்தர்ய ரூபமாய் இருக்கிறது – அருள் உள்ளமே அழகு வெள்ளமாயிருக்கிறது – என்று நிச்சயமாகிறது.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).