நீயே கதி ஈஸ்வரி சிவ காமி தயா சாகரி -
நீயே கதி ஈஸ்வரி
சிவ காமி தயா சாகரி -
எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி)
லலிதா சஹஸ்ர நாமம் உணர்த்தும் மூன்றுப் பொருள்.
ஞாதுரு = காண்பவன் => ஆன்மா /
ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம்
ஞேயம் = காணப்படும் பொருள் =>அம்பாள்
ஞான, ஞேய ஸ்வருபிணீ
அறிவும், அறியப்படும் பொருளுமாக இருப்பவள்,
அல்லது அறிவால் அறியப்படும் பொருள் )
அன்னையே
அறிவும்,
அறியப்படும் பொருளாகவும் இருப்பவள்
என்று பொருள் கொள்ளலாம்.
அதாவது அவற்றுள் பேதமில்லை என்று பொருளாகிறது.
ஆனால் த்ரிபுடியாக ,
ஞான, ஞாத்ரு, ஞேய என்று மூன்றாகவும் பார்த்து,
அவை மூன்றுமே அன்னையாக இருப்பதால் அபேதமானவை என்றும் நிறுவியிருக்கிறோம்;
இந்த நாமத்தை ஞானத்தினால் அறியப்படும் பொருளாக இருப்பவள் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.
அறிவால் அறியும் அறிவின் உருவும்
அறியும் அறிவுமாம் அன்னை – அறிய
அறிவும் அவளும் அபேதம் அவளை
அறிவோம் அடிகள் அடைந்து
அறிவு,
அறிந்து கொள்பவன்,
அறியப்படு பொருள் என்று எந்த பாகுபாடும் இல்லை.
கனவற்ற தூக்கம் நமக்கு 'நான்' என்ற உணர்வைத் தாண்டி ஒரு எல்லையற்ற ஆத்ம உணர்வு இருக்கிறது என்று உணர்த்துகிறது.
ஆழ்ந்த தூக்கத்தில் உணர்வற்று இருக்கிறோம்;
ஆனால் துரிய நிலையில் வெளி உலக பிரக்ஞை இல்லாமல் முழு உள் விழிப்புடன் ஆத்ம உணர்வில் ஒன்றி இருக்கிறோம்.
இவற்றுக்குக் காரணமாக விளங்குபவை
கேவலம்,
சகலம்,
சுத்தம் என்ற மூன்றும்
காரண அவஸ்தைகள்.
கனவு காலத்தில்
உயிர் உடல் முதலிய கருவிகள் இல்லாமல் முற்றிலும் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு இருக்கின்ற நிலையைக் 'கேவலம்'.
என்பர்.
விழித்துக்கொண்டிருக்கும் 'சகலம்' என்று வழங்கப்படும் நிலையில் உயிரின் வினைக்கு ஏற்ற உடல் கருவிகளை இறைவன் அதற்குக் கூட்ட, அதன் அறிவு ஆற்றல்கள் ஓரளவு விளங்கும்.
அதன் பின்னர் உயிர் பக்குவம் பெற்று ஐந்து மலங்களிலிருந்தும் நீங்கிப் பிறவியை அழித்துத் தூய்மை எய்திய நிலை 'சுத்தம்' எனப்படும்.
உதாரணத்திற்கு
இருள் செறிந்த அறையில் உள்ள ஒருவனது கண் இருள் வயப்பட்டு இருளில் மூழ்கி ஒன்றையும் அறியமாட்டாது நிற்றலைப் போன்றது #கேவல# நிலை.
அவ்விருட்டு அறையில் கை விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தால் அதன் ஒளியில் அங்குள்ள பொருள்கள் ஓரளவு புலப்பட்டுத் தோன்றுதலைப் போன்றது #சகலநிலை# எனலாம்.
இவ்வுவமையை மேலும் சிறிது நுணுகி நோக்குவோம்.
விளக்கொளியில் அறையிலுள்ள பொருள்கள் உள்ளவாறு புலப்படு வதில்லை.
பொருள்களின் வண்ணமும் வடிவும் மாறித் தோன்றுதல் உண்டு.
ஒரு மூலையில் வளைந்து கிடக்கின்ற கயிறு பாம்பாகத் தோன்றுதல் கூடும். இவ்வாறு பொருளியல்பு மாறுபட்டுத் தோன்றுவதற்கு எது காரணம்?
விளக்கொளி காரணமா?
இருள் காரணமா?
விளக்கொளி எப்பொழுதும் பொருள்களை விளக்கிக் காட்டுமேயன்றி வேறுபடுத்திக் காட்டாது.
பொருள்கள் வேறுபட்டுத் தோன்றுதல் இருளினால் விளைவதேயாகும்.
விளக்கொளி வராதபோது பொருள்களை முழுதுமாக மறைத்து நின்ற இருளே விளக்கொளி வந்த காலத்தில் அவ்வாறு மறைக்க மாட்டாமல் அவ்வொளியின் சார்பினால் பொருள்களை மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது,
அதுபோலவே, கேவல நிலையில் உயிரை முற்றிலுமாக மறைத்து நின்ற ஆணவ மலமாகிய இருள் சகல நிலையில் விளக்கொளி போன்றதாகிய மாயையின் சார்பினால் இழிந்த பொருளை உயர்ந்த பொருள் போலவும்,
துன்பப் பொருளை இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது.
மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே - எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி).
எல்லாவற்றிற்க்கும் அவளே கதி.
அவளை சரணடைத்தல் வேண்டும்.

Comments
Post a Comment