அம்பாளின் முக வர்ணணை. மோக்ஷ ப்ராப்தி
பகுதி 94.
அம்பாளின் முக வர்ணணை.
மோக்ஷ ப்ராப்தி
Moniksha (Liberation)
#லலிதாசஹஸ்ரநாமம்#
#முகசந்த்ரகளங்காபம்ருகநாபிவிசேஷகா#.
( मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका )
(நிலவில் உள்ள கறைகள்போல அன்னையின் முக விலாஸத்தில் கஸ்தூரி திலகம் இருக்கிறது)
நிலவின் முகத்தில் இருக்கும் களங்கம் என்பது நிலவிற்கு குறையே அல்ல!
அவை அன்னையின் பாதிமதி போன்ற நுதலில் விளங்கும் கஸ்தூரித் திலகம்போல் என்கிறது நாமம்.
இது சொல்லவரும் உள்ளுரைக் கருத்தை,
நெற்றித்திலகம் பெண்களுக்கு வலிமை தருவதென்று அவர்களுக்குக் குறிப்பால் கூறுவதாகக் கொள்ளவேண்டுமோ?
நிலவின் களங்கம் நிமலை வதனத்(து)
இலங்கும் நுதலில் எழிற்போல் – திலகம்
வலமென அன்னை மகளிருக் கெல்லாம்
குலமுறைக் கூறலென்று கொள்
#சாருசந்த்ரகலாதரா#
அம்பாள் வேறு
அரன் வேறா.
இரண்டும் ஒன்றே.
ஒன்றே இரண்டும்.
எனவே அவளும் பிறை சூடி.
அவள் அவரது வாமபாகத்தால்
உமையொரு பாகன்
வாம பாகாள்
அர்த்தநாதீஸ்வரர்.
இவை அனைத்தும் ஒன்றில் ஒன்று அடக்கம்.
ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்.
#சாரு#என்ற சந்திர ஒளி.
#சந்த்ரநிபா#
லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் பெயர்களில் ஒன்று #சந்திரநிபா#
இதன் பொருள், சந்திரன் போன்ற அழகிய முகத்தை உடையவள்.
லலிதா சகஸ்ரநாமம் என்பது,
இந்து கடவுள் லலிதா தேவியின் ஆயிரம் பெயர்களை குறிக்கும் நூல் தொகுப்பாகும்.
ஸ்லோகா எண் 94: -
#சௌந்தயலஹரி#
பரை நீராடப் பன்னீர் பனிநிலவு
தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம் போன்றது சந்திரபிம்பம்
இஷ்டப் பிராப்தி
"கலங்கஹா கஸ்தூரி ராஜணிகரபிம்பம் ஜலமாயம்
கலாபிஹி கற்பூரைர்மரகதகரந்தம் நிபிடிதம்!
அதஸ்த்வத்போகெய்ன பிரதிதினமிதம் ரிக்தகுஹாரம்
விதிர்பூயோ பூயோ நிபிதாயதி நூனம் தவ க்ருதே!"
தாயே சந்த்ரமண்டலமானது களங்கமாகிற கஸ்தூரியுடனும்,
சந்த்ர பிம்பம் தோற்றுவிக்கும் கலைகள் பச்சைக் கற்பூரப் பொடிகளோடு நிரம்பிய மரகத சிமிழாக இருக்கிறது.
இப்படி உன்னுடைய ஸ்தாநனத்திற்காக வைக்கப் பட்டிருக்கும் சாமகிரிகயைளை
நீ தினமும் உபயோகம் செய்வதால் காலியாகும்.
இந்த சிமிழை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிரப்பி வைக்கிறார்.
கஸ்தூரி, பன்னீர்,பச்சை கற்பூரப்பொடி இவை அம்பாளின் ஸ்தாநன திரவியங்கள்.
இவைகளின் பெட்டியானது
சந்திர மண்டலமாகவும் ,
கஸ்தூரி கருப்பாகவும்,
பன்னீர் தளதளவென்றும், சந்திரகிரணங்கள்
கற்பூரப் பொடிகளாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் ஒரு பக்ஷத்தில் குறைந்தும் மற்றொரு பக்ஷ்த்தில் வளர்ந்தும் வருவது.
அன்னையின் ஸ்தானத்திற்கான திரவியங்கள் குறைவதும் பிரம்மா அதை மீண்டும் இட்டு நிறைப்பவதற்கும் உவமையாகச் சொல்லபட்டு இருக்கிறது.
இந்த வானில் தோன்றும் சந்திரமண்டலமாகத் தோன்றுவது பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த மரகதப்பாண்டம்;
கிரணங்களாகிய பச்சைக் கர்ப்பூரத்தால் நிறைவு செய்யப்பட்டது;
களங்கமாகத் தோன்றுவது கஸ்தூரி. ஆகையால் தின்ந்தோறும் உனது உபயோகித்தால் காலியாகும் அப்பாண்டத்தை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிச்சயம் நிரப்பி வைக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.
#அபிராமிஅந்தாதி#.
ஒன்றாய் அரும்பி,
பலவாய் விரிந்து,
இவ்வுலகு எங்குமாய்
நின்றாள்,
அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன்,
நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா! இப்பொருள் அறிவார்--
அன்றாலிலையில் துயின்ற பெம்மானும்,
என் ஐயனுமே. :
அபிராமி என்பது யார்?
அந்த மாபொருள் என்ன?
இதை யாரேனும் விளக்க முடியுமா? விளக்க முற்படுகிறாற் பட்டர் இங்கே.
அவள் ஒன்றாய் இருக்கிறாள்.
எங்கு காணப்படும் பொருளும் அவளே.
பின்னர், அவளே, உலகில் உள்ள அனைத்து பொருள்களாகவும் விரிந்து பரந்து காணப்படுகிறாள்.
'ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து' என்ற தொடர்,
நமக்கு, ஒரு சிறு விதை மிகப்பெரும் ஆலமரமாக விரிவதைப் போன்ற காட்சியை நம் மனதில் எழுப்புகின்றது.
அப்படி, இந்த உலகு முழுவதுமாக நிற்பவள், இந்த அனைத்திலுமிருந்து இணையாமல், தள்ளியும் நிற்கிறாள். ஒட்டியும் ஒட்டாமல், தாமரை இலைத் தண்ணீர் போல நின்றும் காட்சி தருகிறாள்.
இப்படி, இருந்தும் இல்லாமலும் ஒட்டியும் ஒட்டாமலும், அவள் செய்யும் லீலைகளை, யார்தான் அறிய முடியும்?
அப்படிப்பட்ட பரம்பொருள், எனது நெஞ்சினுள்ளே நின்று பொலிகின்றதே இது என்ன அதிசயம்!
இதனை அறியக் கூடியவர்கள்,
அந்த சிவபெருமானும், அன்றொருனாள் ஆலிலையில் துயின்ற அந்த கண்ண பரமாத்மாவும்தான் என்று பேசி முடிக்கிறார் பட்டர்.
இந்தப் பாடலில் மிகச் சுவையான விஷயங்கள் நிறைய உள்ளன.
பாடலைப் படிக்கும்போது, அருணகிரினாதரின்,
"உருவாய், அருவாய், உளதாய், இலதாய்" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
அந்தப் பாடலிலே, அருணகிரினாதரும்கூட,
முருகப் பெருமானின் தன்மையைப் பற்றிப் பேச வரும்போது, 'இருப்பவன், எனினும், இல்லாதவன்; உருவம் உள்ளவன் ஆனாலும், உருவம் இல்லாதவன்' என்றுதான் ஆரம்பித்துப் பேசுகிறார்.
இப்படிப்பட்ட தத்துவத்தை அறிந்தவர்கள்,
எனது ஐயனான சிவ பெருமானும், அந்தத் திருமாலும்தான் என்று சொல்ல வந்த பட்டர்,
திருமாலைக் குறிப்பதற்கு, 'அன்று ஆலிலையில் துயின்ற பரமன்' என்று சுட்டுகிறார்.
திருமாலைக் குறிக்க ஆயிரம் திருநாமங்கள் இருக்க,
'ஆலிலையில் துயின்ற' பரமனைச் சொன்னது ஏன்?
யோசித்துப் பார்த்தால்,
அன்று ஆலிலையில் துயின்றவனும் இந்த உலகில் இருந்தும் இல்லாமல் இருந்தான்.
ஒட்டியும் ஒட்டாமல் இருந்தான். சிறு பிள்ளை போல் தோற்றம் அளித்தாலும்,
இந்தப் பெரும் உலகினையே மூடிய அந்த மகா பிரளயம் கூட அந்தப் பரமனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
அத்தனை உலகினையும் தனக்குள் அடக்கிக் கொண்டும்கூட, அந்தச் சிறுபிள்ளை, இந்த உலகின் மேலேயே படுத்துக் கிடந்தது.
இங்கு பட்டர் அபிராமி அன்னையின் குணங்களாக என்னவெல்லாம் சொன்னாரோ,
அத்தனையையும், ஆலிலையில் துயின்ற அந்தச் சிறுபிள்ளை செய்திருக்கிறது.
அதனால், அந்தப் பரமனை இவ்வாறு சுட்டியதும் பொருத்தமாகவே தோன்றுகிறது!.

Comments
Post a Comment