தெய்வங்கள் பகுதி -2.
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
பகுதி -2.
தெய்வ தத்துவம் ;
தெய்வங்கள்
நான் ராமேச்வரத்திலிருந்தபோது, "த்வாதசாந்தம்"என்று ஒருவர் வந்திருந்தார்.
அவருடைய தகப்பனார் பிள்ளை பிறக்கணுமென்று மதுரையில் ப்ரார்த்தனை பண்ணி அவர் பிறந்திருந்தாராம்.
அதனால் அவருக்கு ஊர்ப் பேரே வைத்துவிட்டார்கள் -
சிதம்பரம், பழநி, திருமலை என்றெல்லாம் வைக்கிற மாதிரி.
நான் பக்கத்திலிருந்த பண்டிதரிடம் 'த்வாதசாந்தம்'என்றால் என்ன என்று கேட்டேன்.
ராமேச்வர சங்கர மண்டபத்தில் ஆசார்யாள் ஸ்தோத்திரித்துள்ள த்வாதச (பன்னிரண்டு) ஜ்யோதிர் லிங்கங்களைச் செதுக்கியிருக்கிறது. பண்டிதர் அதை நினைத்துக் கொண்டோ என்னவோ,
"த்வாசத லிங்கங்களில் தெற்குக் கோடியில் இருக்கும் ராமேச்வர ராமநாதர் தான் த்வாதசாந்தம்"என்றார். அது ஸரியில்லை.
மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஷட்-சக்ரம் (ஆறு சக்ரம்) என்று பொதுவில் சொல்கிறோம்.
இன்னும் ஸுக்ஷ்மமாக அலசிக்கொண்டு போகிறபோது, கடைசியில் வரும் ஆஜ்ஞா சக்ரத்திற்கும் ஸஹஸ்ரார சக்ரத்திற்கும் நடுவிலேயே பன்னிரண்டு ஸ்தானங்கள் சொல்லியிருக்கிறது.
அவற்றில் உச்சியில் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஸ்தானமாக இருப்பதுதான் த்வாதசாந்தம்.
'த்வாதசாந்தம்'என்று தந்திர சாஸ்திரங்களில்,
யோக சாஸ்திரங்களில் நிலையாகச் சொல்லியிருப்பது மதுரைதான் என்று சொல்லி,
மதுரை #த்வாதசாந்தக்ஷேத்ரம்# என்பார்கள்.
இங்கே லோகத்தின் ப்ரம்ம ரந்திரத்தில் ப்ரம்மானந்த ஸ்வரூபிணியாக மீனாக்ஷி இருக்கிறாள்.
பெரிய பெரிய கோபுரங்கள், பிராகாரங்களுடன் வெள்ளைக்கா ரர்களும் பார்த்துப் பிரமித்துக் கொண்டாடும்படியான ஆலயம் மீனாக்ஷிக்கே ஏற்பட்டிருக்கிறது.
அங்கே இருக்கிற சிற்பச் செல்வங்களுக்குக் கணக்கு வழக்கில்லை.
மற்ற க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் பேரிலேயே கோவிலைச் சொல்லி அதில் இன்ன அம்பாள் ஸந்நிதி இருக்கிறது என்பார்கள்.
ரொம்பவும் சக்தியோடு, ஜீவகளையோடு
பாலாம்பாள்,
கல்பகாம்பாள்,
மங்களாம்பாள் முதலிய தேவீ மூர்த்தங்கள் இருக்கிற கோயில்களைக்கூட வைத்யநாத ஸ்வாமி கோவில் (அல்லது முத்துக் குமார ஸ்வாமி கோவில்) ,
கபாலீச்வரர் கோவில்,
கும்பேச்வர ஸ்வாமி கோவில் என்றுதான் சொல்கிறோம்.
ஆனால் மதுரையில் மட்டும் ஸுந்தரேச்வரர் கோவில் என்று சொல்வதில்லை.
மீனாக்ஷியம்மன் கோவில் என்றுதான் சொல்கிறோம். அங்கேதான் ஸுந்தரேச்வரர் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் பண்ணியி ருக்கிறார்.
ஸுந்தரேச்வரரை ஸ்தோத்திரம் பண்ணி, விபூதி மஹிமையாலேயே ஞான ஸம்பந்தர் பாண்டிய ராஜாவின் வெப்பு நோயைத் தீர்த்து,
அதுவரை ஜைனனாக இருந்த அவனை சைவனாக்கினார். இப்படி நம் தேசத்தில் மறுபடி வைதிக மதம் நன்றாக ஸ்தாபிதமாவதற்கே ஸுந்தரேச்வரர் தான் காரணமாயிருந்திருக்கிறார்.
ஆனாலும் அவர் பெருமையை எல்லாம் ஒன்றுமில்லை என்று பண்ணிக்கொண்டு அம்பாள் மீனாக்ஷியே அங்கே முக்யமாக இயிருக்கிறாள்.
மீனாக்ஷியம்மன் கோயில் என்றே சொல்கிறோம்.

Comments
Post a Comment