ஆசார்யாள் காட்டும் அம்பாள் : நிறைவு பகுதி
ஆசார்யாள் காட்டும் அம்பாள் :
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
பகுதி 5
ஈசுவரன் அப்படி இவள் பாதத்தில் தலையை வைத்து நமஸ்கரிக்கும் போது அவனுடைய ஜடையிலிருந்து கங்கா ஜலம் பாதத்தில் விழுமல்லவா?
இதைத்தான் ‘பாத்யம்’ தருவதாகச் சொல்கிறார். ஈசுவரனுக்கு அந்த பிரபுத்வ சக்தியும் மூலமான பிரம்ம சக்தியிடமிருந்துதானே உண்டாயிற்று?
அதனால் அவருங்கூட அகம்பாவமில்லாமல் இங்கே வந்து நமஸ்கரிக்கிறார்.
‘உத்தம ஸ்திரீகள் பாதங்களில் லாக்ஷாரஸம்’ என்கிற செவ்வரக்குக் குழம்பைப் பூசியிருப்பார்கள். அம்பாள் பாதத்தை அலங்கரிக்கவோ வேறு சிவப்பு ஜோதி ஒன்று இருக்கிறது என்கிறார்.
‘ஹரி’ எனப்படும் சாக்ஷாத் நாராயணனின் சிரஸில் குடியிருக்கிற சூடாமணியின் பிரகாசமே, அம்பாளின் பாதத்துக்கு லாக்ஷாரஸமாக இருக்கிறது’ என்கிறார் ஆசார்யாள்.
ஜகத் பரிபாலன கர்த்தாவான மகாவிஷ்ணு அவரது பரிபாலன சக்தியும் பராசக்தியிடமிருந்தே வந்தது என்பதால் அடக்கத்தோடு அவளுடைய சரண கமலங்களில் நமஸ்கரிக்கிறார்.
அப்போது அவருடைய சிரோ பூஷணம் அம்பாளுக்குப் பாத பூஷணமாகிறது. மஹாவிஷ்ணுவின் கிரீடத்திலே டால் அடிக்கிற சிவப்பு மணி அம்பாளின் பாதத்தில் செங்குழம்பு பூசின மாதிரி இருக்கிறது.
தேவர்கள், ஸ்ரீ மகாவிஷ்ணு, பரமேசுவரன் எல்லோரும் அகம்பாவமே இல்லாமல் ஆராதனை செய்த அம்பாள்,
நம் அகம்பாவத்தைப் போக்கி ஞான அநுக்கிரஹம் செய்ய வேண்டும். அதற்கு வழியாக, அவளுடைய சரணார விந்தங்களை நம் ஆச்சார்யாள் போல நாமும் தியானம் செய்ய வேண்டும்.
அம்பாளுடைய பதிவ்ரத்தியப் பணிவைப் பல இடங்களில் சொன்ன ஆசார்யாள்,
இங்கே அவளை ஈஸ்வரனே நமஸ்கரித்ததாகச் சொல்கிறாரே என்றால், இது எல்லாமே லீலைதான். இருவரும் ஒன்றேதான்.
ஒரு பாவத்தில் இவள் நமஸ்கரிக்கிறாள். இன்னொன்றில் அவர் நமஸ்கரிக்கிறார். இரண்டும் ஒன்றுதான் என்றாலும், அவரே சாந்தமான ஸத்வஸ்துவாகவும், இவளை சக்திமயமான சித்தாகவும் விசேஷிப்பது வழக்கம்.
‘ஸெளந்தர்ய லஹரி’யின் முதல் சுலோகத்திலேயே அம்பாளுடைய இந்த அபாரமான சக்தியை ஆசார்யாள் சொல்கிறார்.
(சிவ: சக்த்யா யுக்தோ)
“சக்தியாகிற அம்மா! பரமேசுவரனான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால்தான் காரியம் செய்வதற்குத் திறமை உள்ளவராவார்.
உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்குக்கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்குக் கிடையாது” என்கிறார். தன்னைத் தவிர வேறு ஏதுமே இல்லாததால்,
எதையும் அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது பிரம்மம். இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்துவிட்டன.
பிரம்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க சூரியன், நக்ஷத்திரங்கள் இலிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற எலெக்ட்ரான் வரையில் எல்லாம், எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனஸோ கேட்கவே வேண்டாம்.
எப்போது பார்த்தாலும் அசைவுதான். இத்தனை அறிவுகளும் அசைவுகளும் எப்படியோ பிரம்மத்தில் வந்துவிட்ட மாதிரி இருக்கின்றன! அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்!
பிரம்மத்தை சிவன் என்றும் அதன் சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது,
இதையே ஆச்சார்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்” என்கிறார்.
இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது.
மாயா – எது இல்லையோ அதுவே – மாயா.
நமக்கு மாயையைப் போக்குகிறவளும் அவள்தான்.
நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்; அவளேதான்.
இருந்தாலும் விசேஷமாகச் சில ரூபங்களில் தியானித்தால் நம் மனசு லயிக்கிறது.
எல்லா ரூபத்துக்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிறவளே பிராண சக்தியாக, மூச்சுக்காற்றாக இருக்கிறாள்.
அக்னி, ஜலம், பூமி எல்லாம் அவள் வடிவம்தான். ‘மனஸ்தவம்’ என்கிற சுலோகத்தில் ஆசார்யாள் இதையெல்லாம் சொல்கிறார்.
இதற்கு முன் சுலோகத்தில் (சரீரம் த்வம்) இரவும் பகலும் அம்பாளின் ரூபங்கள்தான் என்பதை ஆசாரியாள் சொல்கிறார். தாயார் குழந்தைக்குப் பால் கொடுக்கிற மாதிரி சூரியன் சந்திரன் என்கிற இரண்டால் லோகத்துக்கு உணவு அளிக்கிறாள் என்கிறார். சூரியனிடமிருந்துதான் தாவரப் பிரபஞ்சம் க்ளோரோஃபில் உண்டாக்குகிறது. தாவரத்தைச் சாப்பிட்டோ, அல்லது தாவரத்தைச் சாப்பிடுகிற பிராணிகளைச் சாப்பிட்டோதான் எல்லோரும் உயிர் வாழ்கிறோம். (அசைவ உணவு உண்கிறவர்களும் தாவரத்தைச் சாப்பிடும் ஆடு, மாடு, பன்றி போன்றவைகளின் ஊனைத்தான் உண்பார்கள். மாம்ஸ பக்ஷிணிகளான நாய், பூனை, புலி, சிங்கம் இவற்றின் ஊனை உண்பதில்லை). சூரியன் தாவரங்களை வளர்க்கிற மாதிரி, சந்திரன்தான் மூலிகைகளை விசேஷமாக வளர்க்கின்றான். அம்பாள் சூரிய வெப்பத்தாலும், சந்திரனின் நிலவாலும் உலகம் முழுவதற்கும் தன் பாலைப் பொழிகிறாள் என்று இதையே ஆசார்யாள் சொல்கிறார். இதெல்லாம் அவளுடைய ரூபங்கள்.
நம் முதுகெலும்புக்குக் கீழிருந்து சிரசு உச்சிக்கு யோக சாஸ்திரப்படி குண்டலினி சக்தியை எழுப்பிக் கொண்டு போகிற போது அம்பாள் தாமரைத் தண்டை உடைத்தால் வருகிற நூலிழை மாதிரி அத்தனை மெல்லியதாக மேலெழும்பிப் போகிறாள் என்று மந்திர சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. “பிஸதந்து தநீயஸீ” என்று இதையே ஸஹஸ்ர நாமமும் சொல்கிறது. இத்தனை சூக்ஷமமாக இருந்தாலும் அதுவே கோடி சூரியப் பிரகாசமாக இருக்கும்; அதே சமயத்தில் உஷ்ணம் துளிக்கூட இல்லாமல் கோடி சந்திரன் மாதிரி குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த ரூபங்களைத் தவிர சகல சப்தமாகவும், வாக்காகவும் இருக்கிறாள். விசேஷமாக மந்திர சப்தங்களாக இருக்கிறாள். இதெல்லாமுமே சூக்ஷ்ம ரூபங்கள்.
நம் போன்ற சாதாரண ஜனங்களுக்காக ஸ்தூலமாகவே லலிதா, துர்க்கா, புவனேசுவரி என்று பல ரூபங்களில் இருக்கிறாள். இந்த ரூபங்கள் நம் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி புண்ணிய க்ஷேத்திரங்களில் பரமாநுக்கிரஹம் பண்ணி வரும் விக்கிரஹங்களாக உள்ளன.
வடக்கே ஹிமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கன்யாகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேசுவரியாகவும், தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாக்ஷியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேசுவரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாக்ஷியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜாபவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும் காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரப்பிரதேசத்தில் விந்த்ய வாஸினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு, எப்போதும் அநுக்கிரஹம் பண்ணி வருபவள் அவளே!

Comments
Post a Comment