ஆதிசங்கர பகவத்பாதாளுக்கு மாத்ருபக்தி அதிகம்.

 ஆதிசங்கர பகவத்பாதாளுக்கு மாத்ருபக்தி அதிகம். 



சிருங்கேரியில் இருந்த சங்கரர் ஆர்யாம்பா பூதவுடலை விடும் நிலையில் இருக்கிறார் என்பதை தனது ஞானதிருஷ்டியில் அறிந்துகொள்கிறார். அஷ்டமாசித்திகளில் லகிமா என்ற சித்தியினால் தேகத்தை லேசாக காற்றில் மிதக்கும்படி ஆக்கிக்கொண்டு காலடியில் இறங்குகிறார்.


 வீட்டு வாசலில் பிராமணர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். சங்கரர் அம்மாவைப் பார்ப்பதற்காக வீட்டினுள் நுழைய காலடி எடுத்து வைக்கும்போது


 “பூர்வாஸ்ரம வீட்டிற்குள் சந்நியாசம் எடுத்துக்கொண்டவன் நுழையக் கூடாது” என்று தடுக்கிறார்கள்.


அம்மா என்ற அன்பை தன்னிடமிருந்து அவர்களால் பிரிக்கமுடியாது என்று வாதாடுகிறார். சமூகத்தை விட்டு விலக்கி வைத்துவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.


அதற்கெல்லாம் அசந்தவரா அந்த தவமுனி? பரவாயில்லை என்று வீட்டிற்குள் நுழைந்துவிடுகிறார். 

காவி உடையை கழற்றி வைத்துவிட்டு வெள்ளைத் துண்டு கட்டிக்கொண்டு ஆரியாம்பாளுக்கு கைகால் பிடித்துவிட்டு சேவகம் செய்கிறார். பரமேஸ்வரனே சங்கரராக அவதரித்தார். 


ஆரியாம்பாள் என்ன புண்ணியம் செய்தாளோ! இறைவன் அவளுக்குத் தொண்டு செய்கிறான். 

சிறிதுகாலம் அம்மாவுக்கு பணிவிடைகள் செய்து காலடியிலேயே வசித்தார்.


“சங்கரா! 


எனக்கு எதிலும் ஆசை கிடையாது. ஆனால் இறப்பதற்கு முன்னால் உன்னைப் பார்த்துவிடவேண்டும் என்று பிரியப்பட்டேன். அதுவும் இப்போது நடந்துவிட்டது. இப்போது எந்த ஆசையும் இல்லை. 


உருவமற்ற பெயரற்ற எல்லாம் கடந்த அந்த பிரம்மம் பற்றி எனக்கு கூறுவாயா?” என்று கேட்கிறார் ஆர்யாம்பா. 


அத்வதை தத்துவத்தையும் பிரம்மம் பற்றியும் ஆதிசங்கரர் தனது தாய் ஆர்யாம்பாளுக்கு உபதேசிக்கிறார். ஆனால் வயது மூப்பின் காரணமாக சங்கரர் சொல்வதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  


ஏன் புரிந்துகொள்ளமுடியவில்லை? இறைவனைப் பெயரோடும் ரூபத்தோடும் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட சங்கரர் 


”சிவ புஜங்கம்” என்ற ஸ்துதியைப் பாடுகிறார். 


சிவன் பார்வதியோடு ஆரியாம்பாளுக்கு கண்ணெதிரே காட்சி தருகிறான். 


பின்னர் விஷ்ணு புஜங்கம் இயற்றிப் பாடுகிறார். ஸ்ரீமன்நாராயணன் லக்ஷ்மி தேவியோடு காட்சி தருகிறார். இதைக் கண்ட பின்பு ஆர்யாம்பா தனது பூதவுடலை விடுகிறார்.


தாய் இறந்தவுடன் கதறி அழுகிறார் சங்கரர். வாய்க்கரிசி போடும்போது தன்நிலை தடுமாறிவிடுகிறார். பெரும் வேதாந்தி என்று அப்போது புகழப்பட்ட சங்கரரே மாத்ருபக்தியில் தன்வசம் இழந்து தாய்ப்பாசத்தில் உருகிவிடுகிறார்.


 மாத்ருகா பஞ்சகம் எழுதினார். 

தாய் இறந்தவுடன் வைதீக பிராம்மணர்கள் யாரும் துக்கம் விசாரிக்கக்கூட சங்கரரின் வீட்டிற்கு வரவில்லை. 


தாயின் உடலைத் தகனம் செய்வதற்கு உதவுமாறு உள்ளூர் வைதீகர்களிடம் இறைஞ்சுகிறார். பாரம்பரியமான வழக்கத்தை மீறி பூர்வாஸ்ரம வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் என்று சம்பிராதயங்களைக் கொண்டாடும் அந்த பிராம்மணர்கள் வரவில்லை.


அன்னமயகோசமாக இருந்த உடலின் மீது பற்றில்லாமல் தாயின் உடலை நான்கு துண்டுகளாக்கி வீட்டுத் தோட்டத்திலேயே தகனம் செய்ய ஆரம்பிக்கிறார். 


எரியூட்ட விறகு வேண்டுமே!


 உள்ளூரில் அப்பிராம்மணர்களிடம் விறகு கேட்டார். 


அவர்கள் பிராம்மணர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டு வாழ முடியாது என்பதால் விறகு தர மறுக்கிறார்கள். 


கொல்லையில் வாழை மரத்தை வெட்டி அதன் தண்டை வெட்டிய பாகங்களின் மீது வைத்து 


“ஏ அக்னி பகவானே! 


நான் செய்வது சரி என்றும் இந்த பிராம்மணர்கள் செய்வது தவறு என்றும் நீ எண்ணினால் இந்த சிதை எரியட்டும்” என்று அக்னிபகவானைக் கூப்பிட்டார். 


சிதை பற்றிக்கொண்டது. தாயின் உடல் தகனமடைந்தது. 

சங்கரர் தன் தாயின் மீது கொண்ட பக்தியை  நினைவு கூர்வோம்.


முற்றும் துறந்த சந்நியாசிக்கே தாய்ப்பாசம் பெரிதென்றால் லௌகீக வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் அம்மாவை எப்படிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!


 மாத்ரு தேவோ பவ:


வெங்கடசுப்பிரமணியன் ராமமூர்த்தி

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).