தேவியின் திருவடி தியானம். 2


 தேவியின் திருவடி தியானம்.

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-2

முதல்படி பாராயணம்; 

அதற்கப்புறம் ஜபம்; 

பின்பு தியானம் பண்ணுவது. 

அப்படி தியானம் பண்ணும் போது,

 ‘பராசக்தி! 

இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக்கொண்டு உன்னிடமே மீண்டும் சேர்ந்து விடும்படியாக அநுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். 

இப்படி ஒவ்வொரு நாளும் அவளுடைய சரணாரவிந்தத்தைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், உயிர் போகும் தருணத்திலும் அவனுடைய கடாக்ஷத்தினால் அவளுடைய தியானம் வரும்.

இந்த உடல் போனபின் இன்னோர் உடல் வராமல் அவளிடம் இரண்டறக் கலந்து சம்ஸாரத்திலிருந்து விடுபட்டுப் பேரானந்த மயமாகி விடலாம்.

தேவியும் குருவும் ஒன்றே. 

எனவே இருவரது திருவடியும் ஒன்றே. 

குரு பாதுகையும் தேவி பாதுகையும் ஒன்றே. 

குரு பாதுகையை சந்திர மண்டலத்தில் தியானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம்.

அமிருதம் சந்திரனிலிருந்தே பொழிவதாக சாஸ்திரம்.

சூரியன் சுயமான பிரகாசத்தை உடையவனாக இருக்கலாம். 

நமக்கு அவன் ஒளி கொடுக்கிறான். என்றாலும், 

அவனால் தாபம் உண்டாகிறது. 

வேர்க்கிறது; தாகம் எடுக்கிறது. அம்பாளுடைய பிரகாசம் நமக்கு ஒளியும் கொடுக்கிறது. தாபத்தையும் நீக்குகிறது. 

எனவே அது சந்திரிகையின் ஒளி போல் இருக்கிறது. 

தாபசாந்தி பண்ணுவது அமிருதம்;

அமிருதமாக நமக்குத் தாபத்தை நீக்கி சாந்தியைக் கொடுத்துக் கொண்டு பிரகாசிக்கிறது அம்பிகையின் கடாக்ஷமும் சரணார விந்தமும்.

உஷ்ணப் பிராந்தியத்தில்

 (Tropics) உள்ள நமது தேசத்தில் இருக்கிறவர்களுக்கு குளிர்ச்சியில் ஒரு பிரீதி. 

‘அவன் குளுமையாக இருக்கிறான். குளுமையாகப் பேசினான், இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது’ என்று சந்தோஷ விஷயங்களுக்குச் சொல்வோம்.

மேல் நாட்டவர்களுக்கு இது நேர் மாறாக இருக்கிறது. 

அவர்களுடைய பிரதேசம் ஒரே குளிர்ச்சியானதால் அவர்களுக்கு உஷ்ணம்தான் ( Warmth) இன்பம் அளிக்கும். 

அவர்களுக்கு கோல்டு (Cold) என்றால் நம்முடைய எண்ணத்திற்கு நேர் விபரீதமான அர்த்தம். 

சரியாக வரவேற்காவிட்டால் cold reception என்பார்கள்.

நிர்த்தாக்ஷண்யமானவனை cold-hearted என்பார்கள்.

நமக்குச் சந்திர கிரணம் மாதிரி தாபத்தை நீக்கிக் குளுமையைக் கொடுத்து ஆனந்தத்தை அளிப்பவள் அம்பிகை. 

அம்பிகை சந்திர மண்டலத்தில் வாஸம் செய்வதாகப் பல இடங்களில் சொல்லியிருக்கிறது. 

நமக்கு இன்பம் கொடுக்கிற பெருநிதி அவள்தான். 

அந்த சாக்ஷாத் பரதேவதையின் சரணத்தைத் தியானம் பண்ணிப் பண்ணி சுத்தமாகி நித்திய க்ஷேமத்தை, ஆனந்தத்தை அடைவோமாக.

#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).