பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு-3
#பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு-3
இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம்.
கொஞ்சம் திவ்விய பிரபந்தத்தையும் பார்ப்போம்.
சோளிங்கர் என்கிற க்ஷேத்ரத்தில் நரசிம்மரை சேவிக்கும்போது, ஆழ்வார் அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே என்று பாடுகின்றார்.
இந்த அக்காரக் கனி என்பதற்கு விளக்கம் கொடுக்கக் கூடிய ஆச்சார்யார்கள் என்ன சொல்கிறார்கள் எனில்,
ஒரு கனியானது இனிமையாக இருந்து பார்த்திருப்போம். ஆனால், ஆழ்வார் என்ன சொல்கிறார் எனில், நாம் வெல்லத்தை எடுத்து அந்த வெல்லமே ஒரு விதையாகி அந்த விதையை நாம் பூமியில் புதைத்து அந்த வெல்லப் பாகிலேயே தண்ணீர் ஊற்றி, அந்த வெல்லமே ஒரு மரமாக முளைத்து அந்த வெல்ல மரத்திலேயே வெல்லமாக ஒரு பழம் வருமாம்.
சாறு மட்டும் இருக்கக்கூடிய வெல்லமாகிய ஒரு பழம் வருமாம். இப்போது அந்தப் பழம் எப்படி இனிப்பாக இருக்குமோ, அதுபோல, பெருமாள் என்று பாடுகின்றார்.
சரி, அதை எதற்கு இங்கு சொல்ல வேண்டுமெனில்,
ப்ரபாஜாலம் என்று சொல்கிறோம் அல்லவா.
அந்த ஒளி கொடுக்கக்கூடிய திருவடித் தாமரை என்று சொல்கிறோம் அல்லவா…
இப்போது ஒளியையே எடுத்து ஒளியே ஒரு தாமரையாகி அந்த ஒளிமயமான தாமரையில் ஒளிமயமான திருவடி.
அதாவது அங்கு ஒளியைத் தவிர வேறெதுவும் இல்லை. தாமரையும் ஒளி. அந்த திருவடியும் ஒளி.
வெளியே சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கெல்லாம் ஒளி கொடுக்கக்கூடிய இந்த திருவடி எப்படி இருக்கிறதெனில் நம்முடைய இருதய ஸ்தானத்திற்குள் தலை கீழாக இருக்கக் கூடிய தாமரை
மலராக இருக்கிறது. அப்போது தைத்திரிய உபநிஷதத்தில் நாராயண
சூக்தத்தில்…``பத்மகோச ப்ரதீகச ஹ்ருத்யம் சாப் யதோமுகம்
அதோ நிஷ்டாய விதஸ்த்யந்தே நாப்யம் உபரி திஷ்டதி,
ஜ்வாலமாலா குலம் பாதி விஸ்வஸ்ய யாதனம் மஹத்’’
- என்று சொல்லக் கூடிய வேத வாக்கியம்தான் இந்த நாமம்.
முடிவில்லாதவனும், அழியாதவனும், அனைத்தையும் அறிந்தவனும், கடலுக்குள் இருப்பவனும்,
உலகிற்கு நன்மை செய்பவனுமான நாராயணனை நான் தியானிக்கிறேன். அவன் இதயத்தில் தலைகீழான தாமரை மொட்டு போல் தொங்கும் ஸ்தானத்திற்குள் உறைகிறான் என்று சூட்சுமமாக இந்த நாமத்தையும் பேசுகின்றது.
இந்த திருவடித் தாமரையின் உபாஸனை எங்கு வந்து முடிகிறதெனில், இருதய ஸ்தானமான தலை கீழாக இருக்கும் தாமரைப் பூவுக்குள் உறையும் பரமாத்மாவிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
நமது இருதய ஸ்தானத்தில் கொண்டு வந்து முடிகிறது. நம்முடைய தஹர உபாசனையில் கொண்டு வந்து முடிகின்றது. இப்படி நாராயண சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள அதோ முகமான பத்மம் எப்போது விகஸிதமாகும்…
எப்போது மலரும் எனில் ஒரு உபாஸகன் இருதய தாமரையில் நெல்முனையளவு துவாரத்திலிருந்து வெளிவரும் அந்த ஒளியை தியானிக்கின்றானோ,
அப்போது மலரும். இருதய ஸ்தானத்தில் இந்த நெல் முனையளவு துவாரமான சூட்சுமமான துளைபோலுள்ள இடத்திலிருந்து வரும் சூட்சுமமான ஒளி இருக்கிறதல்லவா… அந்த ஒளிதான் நாம் வெளியே பார்க்கக்
கூடிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு எல்லாம் ஒளியை கொடுக்கின்றது. இந்த ஒளி உள்ளே இல்லையென்றால் வெளியே சூரிய சந்திராதிகளுக்கு ஒளி கிடையாது.
வெளியே சூரிய சந்திராதிகளுக்கு எது ஒளி கொடுக்கின்றதோ அந்த பரமாத்ம வஸ்துதான் நம்முடைய இருதய ஸ்தானத்திற்குள்ளே இந்த அதோமுக பத்மத்திற்குள்ளே நெல்முனையளவு ஒளியாக இருக்கின்றது.
அந்த ஒளிக்குள்தான் பரமாத்மா இருக்கிறான்.
இதுதான் சிதம்பரம்.
இதுதான் நாம் தரிசிக்கக் கூடிய சிதம்பரம். சித் அம்பரம்.
இங்கேதான் பகவான் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்.
எனவே,
இந்த நாமத்திற்கு நேரடியாகவே சிதம்பரம் கோயிலையும், மூலவரான சிவகாமி அம்மையையும் சொல்லலாம்.
அதாவது சித் சபையில் இருக்கக்கூடிய நடராஜருக்கு
அருகே இருக்கக்கூடிய சிவகாமியை நினைத்து இந்த நாமாவை சொல்லி தியானிக்கலாம்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#
https://searchingismyjob.blogspot.com/2025/11/3.html

Comments
Post a Comment