அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால்?.
தெய்வத்தின் குரல்-2
அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால்?.
நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான்.
உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள்,
காரியங்கள்
எல்லாமும் அவள்தான்.
அவளின்றி
நம்
சரீரம்,
மனசு,
உயிர்
எதுவுமில்லை.
‘சரீரம் த்வம் சம்போ:–
நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்’
என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசார்யாள்
அடுத்த ஸ்லோகத்தில்
நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார்.
அந்த மூலமான மனஸிலிருந்து,
சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது.
அது மேலும் மேலும் ஸ்தூலமாகி,
காற்று,
அக்னி,
ஜலம்,
மண்
எல்லாம் வந்தன.
இதெல்லாமும் நீதான் என்கிறார்.
நீ இல்லாமல்
வேறு வஸ்து எதுவுமே
இல்லை என்கிறார்;
த்வயி பரிணதாயாம் நஹி பரம்.
‘சம்பு’ என்ற உயிருக்கு
நீ சரீரம் என்று சொன்னாலும்,
உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான்.
நீயே தான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் –
த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா.
இங்கே நம் சங்கராசாரியார் சொல்வது,
‘உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்;
உள்ளேயிருக்கிற உயிர்,
அந்தர்யாமி அவரே’ என்கிற
ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது.
ஆனால்
அப்போது கூட உடம்பு, உயிர் என்ற வித்தியாசம் –
துவைதம் – இருக்கிறது.
கொஞ்சம் த்வைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார்.
‘எங்களிடம் இருக்கிற
துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான
பரம ஞானமும், பரமானந்தமும் நீதான்.
இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும்
அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள்,
இரண்டு மாதிரி ஆகி சிவயுவதி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய்’ என்கிறார்.
இது பாவம்தான்.
வாஸ்தவத்தில் விச்வ சரீரமும்
அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான்.
அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ
அந்த சம்புவும் அவளும்கூட ஒன்றுதான்.
அத்வைதம்தான்.
ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால்,
அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்?
தொடரும்.

Comments
Post a Comment