நாராயணனே நமக்கே பறை தருவான்”

திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் பறையை பார்ப்போம்.

இப்பொழுது, ஆண்டாள் கூறும்


 பறை – பட்டியலைப் பார்ப்போம்.


1. பறை தருவான் – (பாசுரம் – 1)


“நாராயணனே நமக்கே பறை தருவான்”


.


அன்று அர்ஜுனனுக்குப்  பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை  அடைவோம். நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான்.


2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம் -8)


“பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு…….


தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்


ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”


அவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘ 


இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால், ‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘


அவன் சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப்போல் அல்ல. ஒருவனிடம்  தவறு  இருந்தாலும், அவன்  தன்னைப் பணிந்தால் இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான். இராவணனே, ‘


அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று சீதை சொல்கிறாள். அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான். அனால்,


இந்த தேர்த் தட்டு பாகன் இருக்கிறானே,  அவன் அப்படி அல்லன்.


பாவத்துடன் வரினும் சரி, பரவாயில்லை என்பவன் இராமன். ஆனால் புண்ணியத்தையும்  விட்டு விட்டு வா என்பவன் கிருஷ்ணன்.


 அதனால் “பறை (உறுதி) வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்  இல்லையா. பார்க்கலாம். ஆராய்ந்து சொல்கிறேன்.” என்று கூறுபவன் கிருஷ்ணன். 


அதனால் சீக்கிரம் போவோம், அவனைப் பார்த்து கேட்டு – இன்னும் காத்திருக்க வேண்டும் என்னும் தொனியில், ஆண்டாள்  இந்த  இடத்தில் பறை என்னும்சொல்லைக் கையாண்டு உள்ளாள்..


3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)


“போற்றப் பறை தரும் புண்ணியன்”


அதனால், அவனை நன்கு போற்றிப் பாடுவோம், நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் – 


அர்ஜுனன இவ்வாறுதான், அவனைத்  தொடர்ந்து, அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதிகொடுக்கவில்லையா?


4. அறை பறை –  (பாசுரம் -16)


‘அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்’.


இதன் கருத்தை முன்னமேயே பார்த்தோம். ரகசியமாக இருந்த மோக்ஷம் என்னும் பெரும் உபாயத்தை, அறைந்து பறை அறிவித்தாற் போல்  அன்றே அர்ஜுனனிடம் சொல்லி விட்டானே. அதை நம்பித்தானே நாங்கள் இன்று வந்திருக்கிறோம்.


5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)


“நெடு மாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருகியாகில்”


அன்றைக்கு உன்னைக் கொண்டாடிய அர்ஜுனனுக்குத் தந்தாயே உறுதி மொழி, அதைப் போல நாங்களும் உன்னைக்  கொண்டாடிக் கேட்கின்றோம், எங்களுக்கும்  அந்த உறுதி மொழி கொடுத்து விடு.


6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)


“சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே”


இதுவும் முன்னமே ஆராய்ந்தது. சாலப் பெரும் பறை  கொட்டி, பல்லாண்டு இசைத்து அவனை வணங்கிய முறைமையை இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.


7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு –


பாசுரம் -27)


இங்கே அந்தப் பறை என்னும் உரையான


உறுதி மொழி கிடைத்தபின் வரக்கூடிய பலன் கூறப்படுகிறது.


“கோவிந்தா உன்றன்னை பாடிப்  பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால், கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.


அன்று போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு உரை தந்த பின், அவனை விட்டு நீ பிரிந்தாயோ? இல்லையே. அவன் கூடவே ரத சாரதியாகவும் இருந்து, அவன் மனத்தை ஓட்டும் யோகேஸ்வரனாகவும் கூடி இருந்தாயே.


அந்தக் கூடி இருக்கும் தன்மைதான் நான் பரிசாகக்  கேட்பது.


8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)


அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை “.


உன்னைப் பலவாறாக சிறுமைப் படுத்தியும் பேசியுள்ளோம். அதை எல்லாம் நீ பெரிது படுத்தாதே. அன்று அர்ஜுனன உன்னைப் பேசாததா? இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள்  விரிந்து இருக்கும் உன்னை, நண்பனை ஏசிப்பேசி பரிகாசம் செய்வது போல்,  உன்னிடம் நடந்து கொண்டஅர்ஜுனனிடம்


நீ கோபம் கொண்டாயா? இல்லையே. அதைப்போல, அன்பினால் நாங்களும் உன்னை இரு மாறாகப் பேசியுள்ளோம். அதற்காகச் சீற்றம் கொண்டு பறை தாராமல் இருந்து விடாதே.


நீ பறை என்னும் உறுதி மொழியை  எங்களுக்குத் தர வேண்டும்.


9.இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)


“இற்றை பறை கொள்வான் அன்று காண்”


ஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என்றில்லை.


அர்ஜுனனுடன் என்றென்றைக்கும் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாய் அல்லவா? அதுபோல இன்றைக்கு மட்டும் எங்களுக்கு நீ தலை ஆட்டுவது போதாது. என்றென்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் எங்களை நீ ஆட் கொண்டு இருக்க வேண்டும்.


10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -10)


இவ்வரிகள் கடைசிப் பாசுரத்தில், பலன் கூறுவது போல் அமைந்துள்ளன.


அங்கு, அன்று அப்பறை கொண்ட விதத்தை, பட்டர் பிரான் மகளான ஆண்டாள் சொன்ன கருத்தைஏற்றுக்கொண்டுஅவன்அடி பணி பவர்கள், என்றும் அவனது திருவருளைப்


பெற்று இனிதுடன் இருப்பர் என்று திருப்பாவைமுடிகிறது.


மாயன் தந்த இந்த உரையை நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்கிறார். மாயன் தந்த வார்த்தை அறிந்தால், “பிறப்போடு, நோயோடு, மூப்பொடு இறப்பில்லை’ என்கிறார்


 (திருவாய் மொழி 7-5-10)


பிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.அதனால் அவன் சரணன்றி வேறொன்றும் நமக்கில்லை என்று இருக்க வேண்டும். நம்மாழ்வார் “வார்த்தை” என்று சொன்னதை “மாயன் உரை” என்று திருமழிசை ஆழ்வார்  கூறுகிறார்.“ஆற்றம் கரை கிடக்கும், கண்ணன் கடல் கிடக்கும் மாயன்


உரைக் கிடக்கும் உள்ளத்தெனக்கு”


(நான் முகன் திருவந்தாதி- 10)


அவன் ஆற்றங்கரை தோறும் படுத்துகொண்டிருக்கிறான். ஒருவர் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஓய்வாக இருக்கிறார். இப்பொழுதைக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது.


நாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை  உணரும் போது, ‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’  என்று கவலைப் பட வேண்டாம். ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான். பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா? தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல,  நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர்  போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு. ‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.


அதனால்தான் ‘கடல் கிடக்கும் மாயன்’ – பாற்கடலில் கிடக்கும் மாயவன், நமக்கு எளிதாக இருக்கும் வண்ணம்  ஆற்றங்கரை  தோறும் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருக்கிறான்.அவன் கொடுக்கும் உரையால் நமக்கு என்ன பயன் என்றால்,


“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா,


தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஆழ்வார்.


யம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.


கொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.கெட்ட பெயரும் நம்மைச் சேராது.


இப்படி எல்லாம் அந்தப்  பரம் பொருள் தரும் பயனை வேதமும், ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும், சிற்றறிவினரான நம்மை ஈர்க்கும் வண்ணம் ஆண்டாள்


பறை என்னும் ஒரு சொல்லில் புதையலையே கொடுத்துள்ளாள். பறை கொட்டி, பறை கேட்டு அவனைப் பணிந்தாலே போதும். அவள் சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் வாசித்தாலே போதும், அவனாகவே நம் மனத்தில்  உள்ள மற்ற எண்ணங்களைப் போக்கி ‘மற்றை நம் காமங்கள் மாற்றி’ விடுவான்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்*


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).