அடியார்களுக்காகஅவ்வப்போதுஇறைவனும்

 #அடியார்களுக்காகஅவ்வப்போதுஇறைவனும்


 


அவர் திருவருளும் அம்மை அப்பராய்க் காட்சித் தந்து மறைவர்.


உண்மை, 


அறிவு, 


இன்பமாய் இருக்கின்ற சிவப்பரம்பொருளின் 


திருவருளே சிவசக்தியாகவும், 


பராசக்தியாகவும், ஆதிபராசக்தியாகவும் 


உலகைப் படைத்து உயிர்களைச் செயல்படுத்த வருகின்றது. 


இப்படிச் சிவப்பரம்பொருளிலிருந்து வேறுபடாத திருவருளே பல்வேறு சக்தி வடிவங்களில் வருகின்றது.


இதனை உணர்த்துவதே நவராத்திரிப் பண்டிகை. 


சிவப்பரம்பொருளின் ஆற்றல் அல்லது சக்தி அருள்திருவுருவாய் நவசக்திகளாய் வருகின்றது.


இவற்றை மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவையிருவ


தமிழ் விரகர் திருஞானசம்பந்தப் பெருமான்,


“சினமலி கரியுரி செய்த சிவன்,


உறைதரு திருமிழலையை,


மிகு தனமனர் சிரபுர நகர் இறை,


தமிழ்விரகனது உரை ஒருபதும்


மனமகிழ்வோடு பயில்பவர்,


எழில்   மலர்மகள், கலைமகள், சயமகள்


இனமலி புகழ்மகள் இசைதர


இருநிலன் இடைஇனிது அமர்வரே”


– திருமுறை : 1


என்றும் குறிப்பிடுகின்றார். 


இதில் அவர் திருவீழிமிழலை எனும் தலத்திலுள்ள சிவப்பரம்பொருளைப் போற்றிப்பாடிய எம்பாடல்களைப் பாடினால் 


சரசுவதி, இலட்சுமி, உமை 

அல்லது துர்க்கை என்று சொல்லும் சக்திகளின் அருளைப் பெறுவர்,


 காரணம் அவை சிவத்தின் திருவருள் என்று குறிப்பிடுகிறார்.


மேலும் இறைவனின் திருவருளான அம்பாளானது ஒன்பது வகையில் நின்று செயலாற்றுகின்றது என்று சற்று விளக்கமாகச் சைவ சித்தாந்த  சாத்திர நூலான சிவஞானசித்தியார் கூறுகின்றது. 


அதாவது சிவப்பரம்பொருள் 


தன் சிறப்பு நிலையில் உண்மை அறிவு இன்பமாய் இருக்கின்றபோது சக்தியானது சிவத்தில் ஒடுங்கியதாயும் உருப்பெற்று வெளிப்படாதநிலையில் இருப்பதாயும் நான்கு நிலைகளில் பரமசிவம், பராசக்தி, நாதம் அல்லது ஓசை, விந்து அல்லது ஒளி என்ற நிலையில் இருக்கின்றது என்கிறது. பின்பு இறைவன் சதாசிவம் வடிவம் கொள்ளும்போது அவனது சக்தி மனோன்மனியாகவும், இறைவன் மகேசுவர வடிவம் கொள்கின்றபோது மகேசுவரியாகவும், இறைவன் உருத்திரன் வடிவம் கொள்கின்றபோது உமையாகவும், இறைவன் திருமால் வடிவம் கொள்கின்றபோது திருமகளாகவும், இறைவன் பிரமனின் வடிவம் கொள்கின்ற போது சரசுவதியாகவும் நம்மிடம் வந்து அருள்பாலிக்கின்றது என்று கூறுகிறது.


இதனைப் பின்வரக்கூடிய கட்டுரைகளில் ஆழமாகப் பார்ப்போம்.


 “சக்தியாய் விந்து சக்தியாய் மனோன்மனி தானாகி


ஏத்துறு மகேசையாகி உமை திரு வாணியாகி  


வைத்துறும் சிவாஆதிக்கு இங்ஙன் வரும்சக்தி ஒருத்தியாகும்


ஏத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”


– சிவஞானசித்தியார்.


இப்பாடல்வழி நமக்குக் கிடைக்கக்கூடிய செய்தி என்னவெனில் சிவப்பரம்பொருளின் ஆற்றலாய் இருக்கக் கூடிய அவ்வொரு சக்தியே வெவ்வேறு வடிவங்களில் வருகின்றது என்கின்ற உண்மைதான். இறைவரும் அந்த அந்த தொழிலுக்கும் இயல்புக்கும் ஏற்ப வெவ்வேறு பெயர்களைக்  கொள்கிறார். இதையறியாமல் நம்மில் பலர் நமக்குப் பல கடவுள்கள் பல சக்திகள், பல ஆண் தெய்வங்கள் பல பெண் தெய்வங்கள் என்று மயங்குகின்றனர்.


இப்படி உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கும் கடவுளின் அருளைச் சக்தியைப் பாமரரும் புரிந்து கொள்ள பல புராணங்களை நம் முன்னோர் இயற்றினர். இதில் சைவநெறிக்கு முரணானதை நாம் ஏற்றுக்கொண்டோமானால் பல குழப்பங்கள் ஏற்படும். அம்பாளுக்குத் தருகின்ற பல பெயர்களும் அச்சக்தியின் இயல்பை ஒட்டியேயாகும். திருவருளைப் போர்க்களத்தில் துர்க்கை எனவும், சினமிகுந்த கோலமாய் காளி என்றும் அனைத்துச் செல்வங்களை வழங்குகின்றபோது பவானி என்றும், புவனத்திற்கு அரசியாக புவனேஸ்வரி என்றும், அகிலத்திற்கு அரசியாய் அகிலாண்டேசுவரி என்றும், எல்லா உலகங்களுக்கும் பேரரசியாய் இராசராசேசுவரி என்றும், செகத்திற்கு ஈஸ்வரியாய் செகதீசுவரி என்றும், ஓம்கார பிரணவமாய் ஓங்காரி என்றும் ஆங்காரம் உடையவளாய் ஆங்காரி என்றும் அழகுமிக்கவளாய் சிங்காரி என்றும் சுந்தரம் மிக்கவளாய்ச் சுந்தரி என்றும் பலவாகக் கூறுகிறோம்.


சிவப்பரம்பொருளின் அருள்நோக்கமே அம்பாள் என்பதனால் அவளின் கண்ணைக் குறித்து மீனைப்போன்ற கண்களை உடையவளாக மீனாட்சி என்றும் விசாலமான கண்களை உடையவளாக விசாலாட்சி என்றும் சிவனைக் காமிக்கின்ற கண்களை உடையவளாக சிவகாமி என்றும் ஏகம்பநாதரை காதல் கொள்வதினால் காஞ்சியில் காமாட்சி என்றும் அவளின் திருவருள் வடிவங்களில் சிலவற்றைக் கூறுவோம்.


நம்முன்னோர்கள் உழவுத் தொழிலில் மழை அல்லது மாரியை நம்பி வாழ்ந்ததினால் இறைவன் திருவருளை மழையாகவே பார்த்தனர். எனவே அச்சிவப் பரம்பொருளின் பெண்வடிவம் கொடுக்கப்பட்டத் திருவருளை மாரி அல்லது மாரியம்மா என்று வழங்கினார்கள். மழை முத்து முத்தாகப் பெய்வதனால் முத்துமாரியம்மா என்றார்கள். கருமேகம் திரண்டு மழை பெய்வதனாலும் உயிர்களுக்குச் சதா அருள் வழங்குவதற்கு அருளைச் சூழ் போல் கருவாகக் கொண்டிருப்பதனால் கருமாரியம்மன் என்று சொன்னார்கள். இறைவன் திருவருள் நிறைந்திருக்கின்ற கோயில் மூலட்டானத்தையும் நாம் கருவறை என்று சொல்வதன் வழி இதனைப் புரிந்து கொள்ளலாம்.


இறைவனைத் தந்தையாகவும் அவன் திருவருளைத் தாயாகவும் கொண்டு காணுகின்றபோது உயிர்கள் இன்னும் நெருக்கமாக உறவுகொண்டு பக்தி செலுத்த வாயில் இருக்கின்றது என்பதனாலேயே நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் சொல்லி வைத்தார்கள். சிவப்பரம்பொருளை அடைவதற்கு முதலில் அவரின் திருவருளை நாட வேண்டும் என்பதனால் தான் நாவுக்கரசு சுவாமிகளும், “தாயும் நீயே தந்தை நீயே” என்பார். சிவப்பரம்பொருளும் அவன் திருவருளான அம்பாளும் வேறல்ல என்று காட்டத்தான் அம்பாளுக்கும் இறைவனின் திருக்கோலத்திலிருக்கின்ற உடுக்கை, சூலம், மான், மழு, திருநீறு, நிலவு போன்றவை எல்லாம் அமைக்கப் பெற்றிருக்கும்.


இதைத்தான் மாணிக்கவாசக சுவாமிகள் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என்றார். வள்ளற்பெருமான், “தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்” என்றார். இதனால்தான் இறைவன் திருமேனியில் இறைவி சரிபாதியாய் இருக்கின்றாள் என்று அருளாளர்கள் அம்பாளை அல்லது இறைவனின் திருவருளைப் பிரித்து பார்க்க முடியாது பாடினார்கள்.


இதுவரை பார்த்தவற்றில் அம்பாள் என்பது சிவம் என்கின்ற பரம்பொருளின் அருள் வடிவம். அது அப்பரம்பொருளின் அன்னையோ மனைவியோ அல்ல. அவ்வருள் ஒருபோதும் உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருளுக்கு வேறுபட்டோ அல்லது மாறுபட்டோ இருக்காது என்பதனை சிந்தித்துத் தெளிவோம்.


– திருச்சிற்றம்பலம் –

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).