அம்பாளுடையவர்ணம்

 #அம்பாளுடையவர்ணம்



ஸ்ரீ சக்ரத்திலே ஹிரண்யவர்ணாம் என்றுதானே சொல்லியிருக்கு"*- பெரியவா    


அப்பய்ய குப்புசாமி என்பவர் 1974ம் ஆண்டில் ஒரு நாள்  பெரியவாளை காஞ்சியில் தரிசித்தபோது, 


பெரியவா அவரிடம் "பகவத் பாதாசார்யாள் இயற்றிய ஸௌந்தர்யலஹரியை அதற்கான சமஸ்கிருத உரைகளுடன் இந்தி, தமிழ், ஆங்கிலப் பொருள் விளக்கம், மற்றும் அதன் பிரயோகம் இவைகளுடன் யந்திரம் முதலான தகவல்களுடன் பிரசுரிக்க வேண்டும் என்றும் இப்போதுதான் நீ ரிடையர் ஆயிட்டியே, இதைப் பண்ணேன் என்று சொன்னார். 


மாம்பலத்திலே இதுக்கு முன்னாலே கணேஷ் அண்ட் கோ போட்ட இதுமாதிரியான புஸ்தகம் இப்போ கிடைக்கலையாம்" என்றார் பெரியவா.


"எனக்கு இதைச் செய்ய சமஸ்கிருத ஞானம் இல்லையே" என்று இவர் தயங்கினார்.


"உனக்கிருக்கிற ஞானம் போதும், திருச்சிராப்பள்ளியிலே நிறைய பண்டிதர்கள் இருக்கா அவாளைக் கேட்டுக்கோ" என்று பெரிய பொறுப்பிற்கு அருட்கட்டளையிட்டு அனுப்பிவிட்டார்.


இரண்டு ஆண்டுகள் திரு குப்புசாமி முயன்று பல நூல் நிலையங் களுக்குக் கடிதம் எழுதி சௌந்தர்யலஹரியின் உரைகளின் பிரதியைப் பெற்றும், 


பல சமஸ்கிருத வித்வான்களின் உதவியோடும் ஒரு வழியாக சுலோகங்கள், அதன் கீழ் இந்தி, தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு என ஒரு விதமாக முடித்தார்.


பின் புஸ்தகத்தில் போட வேண்டிய படங்களைப் பற்றி  பெரியவாளிடம் உத்தரவு கேட்க காஞ்சி சென்றார்.


"காமாட்சி, மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி, 

லலிதா திரிபுரசுந்தரி, ஆதிசங்கரர், ஸ்ரீ சக்ரம் இவைகளைப் போடலாம். லலிதாம்பிகை படமும், 


ஸ்ரீ சக்ர படமும் மந்திர சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிற மாதிரி இருக்கணும். ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ வித்யை புஸ்தகங்களிலே சொல்லியிருக்கிற வர்ணங்களோட வரையணும்" என்று கூறி அவைகளை யார், 


யாரிடம் விபரமாகத் தெரிந்து கொள்ளலாமென்று அவர்களின் பெயர் முகவரி முதற்கொண்டு  பெரியவா விளக்கிய விதம் இவருக்கு மலைப்பாக இருந்தது.


"என்னைப் பெரியவா சோதிக்கக்கூடாது. 


உண்மையிலேயே இத்தனை பெரிய காரியத்தை நான் எப்படி பெரியவா அபிப்ராயப்படி முடிப்பேனோ தெரியலே" என்று  பெரியவாளிடம் தன் பயத்தை தெரிவித்தார்.


அதற்கு பெரியவா "பயப்படாமல் போ. இன்னும் கொஞ்ச நாளுக்குள்ளே புஸ்தங்களைப் பாத்து ஸ்ரீ சக்ரம், லலிதாம்பிகை அம்சங்கள், வர்ணங்கள் எல்லாத்தையும் ஒருத்தரை எழுதச் சொல்றேன்.


அம்பாள் அனுக்ரஹம் செய்வாள். எந்த சந்தேகம் வந்தாலும் இங்கே வா" என்று தெம்பூட்டி அனுப்பினார்.


திருச்சிக்கு திரும்பிய குப்புசாமி, அங்கே ஸ்ரீ வித்யா பற்றிய விஷயங்களை அறிந்த ராதாகிருஷ்ண சாஸ்திரிகளிடம் பெரியவாளின் ஆக்ஞையை விவரித்து உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். 


சாஸ்திரிகள் அவருக்குத் தெரிந்த ஒரு ஓவியரிடம் வரையக் கொடுக்கலாம் என்று ஆலோசனை சொன்னார்.


நடுவே மஹாபெரியவா தன் வாக்கின்படி சென்னையிலிருந்த ஸ்ரீவித்யா மந்திர சாஸ்திர நிபுணரிடமிருந்து லலிதா திரிபுரசுந்தரி, 


ஸ்ரீசக்ரம் ஆகியவைகளின் படங்கள், அவற்றை எப்படி வரைய வேண்டும், படங்களில் என்னென்ன வர்ணங்கள் எந்தெந்த பாகங்களில் வர வேண்டும் போன்ற விபரங்களை இவருக்குக் கிடைக்கும்படி அனுப்பி வைத்தார்.


இந்த விபரங்களுடன் குப்புசாமி, ராதாகிருஷ்ண சாஸ்திரிகளுடன் அந்த வயதான ஓவியரைச் சந்தித்தார்.


"நான் வரையறதை ஒரு வருஷ காலமா விட்டுட்டேன். இருந்தாலும்  பெரியவா சொன்னாங்கறதாலே என்னாலே முடிஞ்ச வரைக்கும் படங்களை வரைஞ்சு தர்றேன். ஒரு மாதமாகும். பத்து நாளுக்குள்ளே ஒரு மாடல் ஸ்கெட்ச் போட்டுத் தருகிறேன். 


அவைகளைப் பெரியவாளிடம் காட்டி அவர் சரின்னு சொன்ன பிறகு செய்து முடிப்பேன்” என்றார். 


பத்து நாட்கள் கழிந்தன. ஓவியர் திரிபுரசுந்தரி படம் வரைந்து கண்ணை மட்டும் திறக்காமல் பெரிய அட்டையில் வரைந்திருந்தார். 


ஸ்ரீ சக்ரத்தையும் சாஸ்திரப்படி வரைந்து கொடுத்திருந்தார்.  பெரியவா சரி என்று சொன்னதும் திரிபுரசுந்தரி அம்மனின் கண்களை வரைந்து திறப்பதாகச் சொன்னார்.'


மறுதினம் இந்த இரண்டு படங்களையும் எடுத்துக் கொண்டு இவர் காஞ்சி சென்றார். 

அப்போது அங்கு வேத பரிபாலன சபையின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 


அதில் வேத பண்டிதர்கள் தர்க்கம் செய்து சில சந்தேகங்களுக்கு விவாதித்து விடை காண்பார்கள்.  பெரியவாளெனும் ஞானமூர்த்தி ஏதும் அறியாதவர் போல் அந்த தர்க்கங்களைக் கேட்பதும், ஒன்றுமறியாமல் சந்தேகம் கேட்பதுமாக வீற்று பின் சபைக்கு பல அர்த்தங்களையும், அரிய தர்மங்களையும் உபதேசித்து அனுக்ரஹம் புரிவார்.


மஹா பெரியவா ஸ்ரீ சக்ரத்தின் படத்தையும், 


திரிபுரசுந்தரியின் படத்தையும் பார்த்தார். மாதா திரிபுரசுந்தரியின் படம் நன்றாக வரையப் பட்டுள்ளதாகவும், கண்ணைத் திறக்கலாமென்றும் உத்தரவருளினார். 


பின் ஸ்ரீ சக்ர படத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.


சிறிது நேரம் பார்த்து விட்டு  "அம்பாள் படம் நன்னாயிருக்கு. ஸ்ரீ சக்ரத்தில் மூன்று வளையங்களுக்கும், கோணங்களுக்கும் நடுவே உள்ள பாகத்தை ஏன் வெள்ளையாக விட்டுட்டார்" என்று கேட்டார் பெரியவா.


உடனே அந்த நுணுக்கமான விஷயத்திற்கு விடை கேட்டு பதில் தரும் விளையாட்டை  பெரியவா தொடங்கியது தெரிந்தது. 


சபைக்கு திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள், இஞ்சிக்கொல்லை ஜகதீச சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீ வித்யா உபாசகர் ராமகிருஷ்ண சாஸ்திரிகளையும் அழைத்து வர அனுப்பினார். ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ வித்யை சம்பந்தப்பட்ட சில நூல்களையும் கொண்டு வரச் சொன்னார்.


வித்வான்களிடம் ஸ்ரீசக்ர படத்தை காண்பித்து 


"ஸ்ரீ சக்ரத்தில் த்ரிவலயத்திற்கும்,

 43 கோணங்களுக்கும் நடுவிலுள்ள இடைவெளிக்கு ஏதாவது வர்ணம் சொல்லியிருக்கா?" என்றார்.


ஒருவர் பொதுவாக அந்த பாகத்திற்கு எந்த வர்ணமும் குறிப்பிடவில்லை என்பதை ருத்ர சியாமளத்தில் பார்க்கலாமென்றார்.


பெரியவா உடனே அந்தப் புத்தகத்தைக் கொண்டு வரச் சொல்லி 20 நிமிடங்கள் பார்த்தார்கள்.


அந்த புத்தகத்தில் அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. என்றனர். 


பெரியவா "அந்த பாகம் ஆகாயத்தைக் குறிக்கலாம். அதனாலே அதுக்கு வர்ணமில்லை போலிருக்கு" என்றார்.


பிறகு சிறிது யோசித்து விட்டு "வெள்ளை காகிதத்தில் வரையும் போது அந்த பாகத்திற்கு வர்ணம் ஏதும் கொடுக்காமல் விட வேண்டியதா போறது. 


அதனாலே அந்த பாகம் தெரியும். பாக்கி எல்லா கோணங்கள், த்ரிவலயம், த்ரிரேகைன்னு எல்லாத்துக்கும் வர்ணம் இருக்கு. 


ஸ்ரீ சக்ரம் முழுவதும் அம்பாள்தான். அங்கங்கே ஒரு தேவதை கூட இருக்கா. ஆனா இந்த இடைவெளியிலே ஒரு தேவதையுமில்லை. 


அம்பாளுடைய வர்ணம், ஸ்ரீ சக்ரத்திலே ஹிரண்யவர்ணாம்

(பொன்னிறம் கொண்ட)

என்றுதானே சொல்லியிருக்கு.


அதனாலே இந்த இடைவெளியிலே தங்க வர்ணம் கொடுக்கலா மோல்யோ?" 


என்று வித்வான்களைப் பார்த்து ஒன்றும் தெரியாதவர் போல் மகாஞானேஸ்வரரான பெரியவா கேட்டார்.


"ரொம்ப சரியா பெரியவா தீர்ப்பு சொல்லிட்டா" என்று வித்வான்கள் ஆமோதித்தனர்.


இப்படி நுணுக்கமான விஷயங்களில் சந்தேகத்தை உண்டு பண்ணி, 


அந்த சிறிய விஷயத்தைப் பற்றி அதுவரை யாரும் கவனமாக தெரிந்து கொள்ளவில்லை என்பதை அனைவரையும் உணரும்படி செய்து அதில் உள்ள சூட்சமத்தைப் பலருக்கு அறிவிக்கும் இப்படிப்பட்ட நாடகங்கள்  மஹாபெரியவாளை சாட்சாத் ஈஸ்வர திரு அவதாரமாகக் காட்டுவது பல வித்வான்களின் அனுபவமாக அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).